Sunday, November 4, 2007

தீர்வு 1: இட ஒதுக்கீட்டுக்கு :

தீர்வு 1: இட ஒதுக்கீட்டுக்கு :

சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்னும் அனைவரும் சமம் எனவும் எல்லாரும் எல்லா இடங்களிலும் முழுமையாக இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியவில்லை। இத்தனைக்கும் மத்தி முதல் மாநிலம் வரை எல்லா இடங்களிலும் சட்ட வடிவில் இட ஒதுக்கீடு அமுலாக்கப்பட்டு உள்ளது

தற்போது உச்ச நீதி மன்றம் ஆட்சியாளர்களைப் பார்த்து இட ஒதுக்கீடு இன்னும் எத்தனை ஆண்டு வழங்கப்படும்? அது குறித்த சரியான புள்ளி விவரம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது। எத்தனையோ வருடங்களுக்கு முன் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பும் பிற்பாடு சின்னச்சின்ன அளவீடாலான குத்துமதிப்பான கணக்குகளும் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க முடியாதல்லவா? எனவே இதற்கு உடனடியாக பதில் கூற முடியாது எனவும் அவகாசம் வேண்டும் எனவும் மத்திய அரசு பதில் கூறி இவ்விஷயத்தை தற்காலிகமாக ஆறப் போட்டுள்ளது।

ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு என்ன? ஏன் இத்தனை காலமாக மக்கள் சமம் அடையவில்லை? ஒருவேளை இந்த திட்டமே கோளாறோ? அல்லது அமுல்படுத்தியது சரியில்லையோ? என்ற கேள்விகள் சாதாரண மக்களுக்கு எழுகின்றன.

ஓட்டு அரசியலிலேயே ஒண்டு குடித்தனம் நடத்துவதால் அரசியல் கட்சிகளுக்கு இதில் நேரடியாக பதில் கூற முடியாது முடிந்த வரை ஜவ்வு மாதிரி இழுக்கத்தான் முடியும்। இந்த ஆட்சி ஆனாலும் சரி வேறு ஆட்சி ஆனாலும் சரி யாராயினும் இதே கதைதான் நீடிக்கும். கோர்ட் எத்தனை முறை கேட்டாலும் மௌனம் மட்டுமே பதிலாய் வரும்.

நமக்குத்தான் ஓட்டு பயம் இல்லையே. நாமாவது இது பற்றி நியாயமாகவும் நடுநிலையாகவும் சிந்திப்போம். இத்தனை நாள் நடந்தது கண்டிப்பாக ஒரு தெளிவான தொலை நோக்குடன் செயல்படவில்லை என்பதும் ஆனால் அதே சமயம் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் சமூக நீதி நிலை பெற்றதற்கு இதுவே முழு காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.

முதலில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்காக இருந்தது மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்றெல்லாம் கிளை போல் பரவி, சாதி அடிப்படையிலான முழு பிரிவினை ஆகிவிட்டது.

மக்கள் மனமும் தங்களுக்கு ஏதானும் சலுகைகள் கிடைக்குமென்றால் தங்களை இன்னும் கீழான பட்டியலில் சேர்த்தாலும் கவலை இல்லை என்ற எண்ணத்தில் ஊறி அதற்காக அவ்வப்போது போராடவும் துணிந்து விட்டார்கள்.

இன்றைக்கு நகரங்களில் பெரும்பாலும் அறிவிக்கப்படாத சமத்துவபுரங்களான பகுதிகளே இருப்பதால் இவ்விடங்களில் சாதி அடிப்படையிலான ஒதுக்கீடு என்பதே ஒரு கேலிகூத்துதான்.

ஏற்கனவே இட ஒதுக்கீட்டின் மூலம் பயன் பெற்றவர்களோ அல்லது அவர்களின் குடும்பத்தாரோ மீண்டும் மீண்டும் பயன் அடைகிறார்களே அன்றி உண்மையாக பயன் பெற வேண்டியவர்கள் அடி மட்டத்திலேயே இருக்கிறார்கள். இன்னும் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் இரட்டை குவளை முறையாலும் மற்றும் பல சமூக அவலங்களாலும் பாதிக்கப்பட்டே இருக்கிறார்கள். ஓரளவு தலித் அமைப்புக்கள் பலமாக உள்ள இடங்களிலும் அல்லது வலிமையான ஆட்களாக இருப்பவர்களும் மட்டுமே இந்த கொடுமைகளில் இருந்து தப்ப முடிகிறது.

சட்டங்கள் போட்டும் இதை மாற்ற முடியவில்லை. அப்படியாயின் இதற்கு தீர்வு தான் என்ன? உண்மையான கல்வியும் பதவிகளும் அவர்களுக்கோ அல்லது அவர்களை சார்ந்தவர்களுக்கோ இன்னும் கிடைக்கவில்லை என்பது தானே? இதற்கு முன்னரே இட ஒதுக்கீடு மூலம் பயனடைந்தவர்களே மீண்டும் மீண்டும் அனுபவிப்பதால் அங்கும் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் மேலும் கீழாகிறார்கள்.

அரசாங்கங்களுக்கோ இதில் ஒரு தைரியமான தெளிவான முடிவை எடுக்க பயமாக உள்ளது. எங்கே தொட்டால் எங்கே வெடிக்குமோ என்று. எந்த அரசாங்கம் இதில் கையை வைத்தாலும் எதிர் கட்சிகள் ருத்ர தாண்டவம் ஆடத்தான் செய்யும். அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் அல்லது எத்தனை தலைமுறைகளுக்குத்தன் ஏழைகளும் ஒதுக்கப்பட்டவர்களும் இட ஒதுக்கீட்டை நம்பி வாழ வேண்டும்? அவர்களுக்கு தன்னம்பிக்கையும் போட்டி போடும் குணமும் வளர வேண்டாமா? நான் இப்படி இருந்தாலே போதும், எனக்கு கோட்டா இருக்கு என்று வளரும் பருவத்திலேயே அவனது திறமையை நசுக்கும் முயற்சி அல்லவா இது? ஒரு குறிப்பிட்ட கால வரையை நிர்மாணிக்க முடியவில்லை என்றால் அரசுகள் எதற்கு? கட்சிகள் எதற்கு? ஒரு வேளை இந்த பிரச்சினை முடிந்து விட்டால் நாம் வேறு எதை வைத்து கட்சி வளர்ப்பது அல்லது வயிறு வளர்ப்பது என்று நினைக்கிறார்களோ? சரி அவர்கள் எப்படியாவது போய்த் தொலையட்டும். நாமாவது ஒரு முடிவை முன் வைப்போம்.

இது நடக்குமா என்பது தெரியாது. ஆனால் நாம் நமக்குள்ளே யோசிப்போம்.முதலில் இன்றைக்கு உள்ள ஒதுக்கீடுகள் என்னென்ன? பி.சி., எம்.பி.சி, எஸ்.சி., மற்றும் எஸ்.டி. சில மாநிலங்களில் முதல் இரண்டு பிரிவும் சேர்த்து ஒ.பி.சி. என்று உள்ளது. முற்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என்று எதுவும் கிடையாது.

இந்தியா போன்ற மாபெரும் மக்கள் தொகை நாட்டில் நம்மிடம் இருக்கும் பள்ளி, கல்லூரிகள் மிகவும் குறைவு. இந்த விகிதாசாரத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் போடப்பட்டும் அவை முழு பலனைத் தரவில்லை. அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு தரத்தையும் மேம்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் நல்ல பலனைப் பெற முடியும்.

சரி இட ஒதுக்கீடுக்கு வருவோம். இன்றைக்கு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அனைவருக்கும் அவர்கள் பட்டப் படிப்பு முடிக்கும் வரை இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவிக்கட்டும். அதாவது சுமார் பதினைந்து ஆண்டுகள். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பள்ளிப் படிப்போடு பல விதமான திறமைகளையும் பல்வேறு மொழி ஆர்வத்தையும் உயர்ந்த அறிவியல் மற்றும் கணினி பயிற்சியையும் தகுந்த ஆசிரியர்களையும் சமூக ஆர்வலர்களையும் கொண்டு பயிற்றுவிக்கட்டும்.

அதே போல இன்றைக்கு ஆறாம் வகுப்பு சேரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரட்டும். அவர்கள் பட்டபடிப்பு முடிக்கும் வரை அதாவது சுமார் ஒன்பது ஆண்டுகள்.

மேலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இன்றைக்கு ஒன்பதாம் வகுப்பு படிப்பவர்கள் முதல் இட ஒதுக்கீடு வழங்கப்படட்டும். அதாவது சுமார் ஏழு ஆண்டுகள்.

அதன் பிறகு அனைவருக்கும் சில பொருளாதார அல்லது ஏற்கனவே அனுபவித்திருத்தல் போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து உண்மையான சமத்துவத்தை சரித்திரத்தில் இடம் பெறச்செய்யலாம்.

இன்றைய சூழ்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தகுதி வாய்ந்த முற்பட்ட வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு கொடுக்கும் கால அளவீட்டில் ஒதுக்கீடு வழங்கலாம்।

மேலும் இட ஒதுக்கீடுகளுக்குள் அந்தந்தப் பிரிவுகளில் பொருளாதார ரீதியிலும் ஏற்கனவே ஒதுக்கீடை அனுபவிக்காத பின்தங்கிய நிலையிலும் இருப்பவர்களுக்கு ஓர் உள் ஒதுக்கீடு ஏற்படுத்தி அவர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

சிலர் சொல்வது போல் உடனடியாக இட ஒதுக்கீட்டு முறையை கபளீகரம் செய்வதும் நாம் இவ்வளவு நாள் செய்து வந்த சமூக நீதிக்கு பாதகம் ஆகிவிடும். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான கட்டமைப்புகளும் அரசாங்கத்திடம் பண வசதியும் உதவி செய்ய பலரும் இருக்கும் போது இந்த கால அளவே அதிகம் தான்.

கல்வி என்பதை கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட, வாக்கு வங்கிக்கு அப்பாற்பட்ட விஷயமாக்கி, எந்த அரசாங்கம் வந்தாலும் இது சத்துணவு போல் செயல்படுத்தப்படும் என்ற ஒரு வெறியுடன் ஈடுபட வேண்டும்.

தங்கள் பிள்ளையை ஒன்றாம் வகுப்பு சேர்க்கும் போதே அவனை எப்படி ஆக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்பி முடிவு எடுக்கிறார்கள். ஒரு சாதாரண நடுத்தர வகுப்பைச் சேர்ந்த தந்தைக்கே தன் பிள்ளையை எப்படியும் பொறியாளராக ஆக்கி விடுவேன் என்ற நம்பிக்கை துளிர் விடும்போது ஓர் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட கால வரைக்குள் இத்திட்டத்தை செயல் படுத்த முடியாதா என்ன?

சிந்திப்பீர்களா தலைவர்களே?

அன்புடன்,

ஈ. ரா.

3 comments:

EE. RAA @ Rams said...

whoever reads the article, pls give a comment.

thanks n rgds,

Rams

Sankarapandian said...

Hey!Ram,

Nice article, my small comment font color and background color is not matching... I felt difficult to read.

Keep the good work.

Unknown said...

Rama - Really great...Keep posting...